This Article is From May 11, 2020

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நலம் சீராக உள்ளதாக தகவல்!

1990 ஆம் ஆண்டுகளில், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக பெரிதும் பாராட்டப்படுபவர் பொருளாதார வல்லுநரான மன்மோகன்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நலம் சீராக உள்ளதாக தகவல்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் மன்மோகன். 

ஹைலைட்ஸ்

  • நேற்றிரவு மன்மோகன் சிங்கிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது
  • இரவு 8:45 மணி அளவில் அவர் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்
  • தற்போது மன்மோகனின் உடல் நலம் சீராக உள்ளதென தகவல்
New Delhi:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று நெஞ்சு வலி சம்பந்தமான பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நலம் சீராக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. 

நேற்று இரவு 8:45 மணி அளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மன்மோகன் சிங். “அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. சமீபத்தில் அவர் உட்கொண்ட மருந்து எதிர்வினையாற்றி உள்ளதால் தற்போது அவரின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் கண்காணிப்பில் உள்ளார்,” என்று எய்ம்ஸ் வட்டாரம் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளது. 

எய்ம்ஸில் உள்ள இருதயவியல் நிபுணரான மருத்துவர் நித்திஷ் நாயக், மன்மோகன் சிங்கிற்கு சிகிச்சை அளித்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இப்படி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மன்மோகனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முழு ஓய்வில் இருக்க அவரை அறிவுறுத்தியுள்ளார்கள். 

ராஜஸ்தானிலிருந்து ராஜ்ய சபாவின் எம்.பி-யாக உள்ள மன்மோகன், இதுவரை இரண்டு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஒரு பைபாஸ் சிகிச்சையும், 2009 ஆம் ஆண்டு இன்னொரு பைபாஸ் சிகிச்சையையும் அவர் செய்து கொண்டார். நீரிழிவு நோயினாலும் அவதிப்பட்டு வருகிறார் மன்மோகன். 

1990 ஆம் ஆண்டுகளில், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக பெரிதும் பாராட்டப்படுபவர் பொருளாதார வல்லுநரான மன்மோகன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் மன்மோகன். 

கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வீடியோ கான்ஃபரென்சிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலோசனையின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களோடு கலந்துரையாடினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, மன்மோகனும் பங்கேற்றார். 

கலந்துரையாடலின் போது மன்மோகன், “தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கிற்குப் பின்னர் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து தெளிவாக கூற வேண்டும்,” என வலியுறுத்தினார். 

மன்மோகன் சிங், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல முக்கியப் புள்ளிகளும் அவர் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர். 

கெஜ்ரிவால், “மன்மோகன் சிங் ஜியின் ஆரோக்கியம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். சீக்கிரமே அவர் முழு உடல் நலம் பெறுவார் என நம்புகிறேன். மொத்த இந்தியாவும் நம் முன்னாள் பிரதமருக்காக பிரார்த்திக்கிறது,” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

(With inputs from PTI)

.