New Delhi: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடில்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மன்மோகன் சிங், கடந்த 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிதம் மிகவும் குறைந்துவிட்டது. தேர்தலின் போது இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என பாஜக அரசு அளித்த வாக்குறுதி தொடர்பாக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் வென்ற பாஜக அரசு, இன்னும் அதை நிறைவேற்றவில்லை. அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மோடி கூறிவருவதை மக்கள் நம்பவில்லை என்று மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.