நாடு முழுவதும் குணமடைந்தோரின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட சிறப்பானதாய் உள்ளது என பிரதமர் பெருமிதம்
ஹைலைட்ஸ்
- கொரோனா தொடக்க நிலையில் இருந்ததைபோலவே தற்போதும் ஆபத்தானதாகவே உள்ளது
- இந்தியா கொரேனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது
- லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனா வைரஸ் தொடக்க நிலையில் இருந்ததைபோலவே தற்போதும் ஆபத்தானதாகவே உள்ளது.” என கூறியுள்ளார். இந்தியா கொரேனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“நாடு முழுவதும் கொரோனா மீட்பு விகிதம் மற்ற நாடுகளைவிட சிறந்ததாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை. தற்போது கொரோனா ஆரம்ப நிலையில் இருந்ததைப்போலவே உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” என பிரதமர் கூறியுள்ளார்.
இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13,85,222 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 705 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது 4,67,882 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,85,577 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 32,063 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மீட்பு விகிதம் 63.91 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.