பாரிக்கர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பாஜக எம்எல்ஏ மவின் கோடின்ஹோ கூறியுள்ளார்.
Panaji: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணையம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்ற அவர், அங்கு சிகிச்சை முடித்த பின்னர், டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சுமார் 6 மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் கடந்த 14-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கோவா திரும்பிய அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நிலையை கருத்தில் கொண்டு பாரிக்கர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் கோவா அமைச்சரவை கூட்டத்தை தனது இல்லத்தில் நடத்தி முடித்துள்ளார்.
இதுகுறித்து கோவா எம்எல்ஏ மவின் கோடின்ஹோ கூறுகையில், முதல்வர் பாரிக்கர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். விவாதத்தில் பங்கேற்றார். அமைச்சர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடக்கவில்லை என்ற ஒரு குறைதான் இருக்கிறதே தவிர, மற்றபடி எப்போதும் நடக்கும் அமைச்சரவை கூட்டம்போலத்தான் முதல்வர் வீட்டிலும் நடந்தது என்றார்.
பாரிக்கரின் உடல் நிலை தேறிவருவது கோவா பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.