இனி சுற்றுலாப் பயணிகள் மட்டுமே காசினோக்களில் அனுமதிக்கப்படுவர் என்று கோவா முதல்வர் மனோஹர் பரிக்கர் தெரிவித்தார்
Panjim: 2019 முதல் கோவாவாசிகள் காசினோக்களில் நுழையத் தடை விதிக்கப்போவதாக கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார். இனி கோவாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கேசினோக்களில் அனுமதிக்கப்படுவர். மாநில அரசு அடுத்த மாதம் இதற்காக கேசினோ கொள்கை ஒன்றினை அறிவிக்க உள்ளது. அதன்படி சூதாட்டத் தொழிலினை முறைப்படுத்த ஒழுங்குமுறை ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
"கோவாவாசிகள் சூதாட்ட விடுதிகளுக்குச் செல்ல அனுமதிப்பதில்லை என்பதை அரசின் கொள்கை முடிவாக எடுத்துள்ளோம்.
இதற்கான ஆணையரை அடுத்த மாதம் நியமிக்க உள்ளோம்" என்று கோவா முதல்வர் மாநில சட்டமன்றத்தில் அறிவித்தார்.
பரிக்கர் மேலும் கூறுகையில் "பனாஜியின் மாண்டோவி ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் சூதாட்ட விடுதிகள் இதற்காக அமைக்கப்படவுள்ள சிறப்பு மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும். இதுவும் அறிவிக்கப்பட இருக்கின்ற அரசின் கேசினோ கொள்கையில் இடம்பெறும்.
வரையறுக்கப்பட்ட பகுதிகளில் சூதாட்ட விடுதிகள் அமைக்க விண்ணப்பித்தால் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். இவ்வாறான விடுதிகளை அமைக்கப் பெரும் முதலீடு தேவைப்படுவதைக் கணக்கில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது"
தற்போது ஆறு காசினோக்கள் மாண்டோவி ஆற்றுக்கு அக்கரையிலும் ஒன்பது காசினோக்கள் ஆற்றங்கரைப் பகுதியைச் சுற்றியுள்ள பல ஐந்து-நட்சத்திர ரிசார்ட்டுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சியாக இருந்தபோது (2007-2012) கோவாவில் காசினோக்கள் செயல்பட பாஜக கடுமையாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. அவற்றுள் பலவற்றுக்கு காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகள் உரிமம் வழங்கியிருந்தன.
பரிக்கர் முதலிய பல முன்னணி பாஜக தலைவர்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காசினோக்களை இழுத்து மூடுவோம் என்று பல முறை உறுதி அளித்திருந்தனர்.
2012இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அடுத்தடுத்த பாஜக அரசுகள் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறியபோது காங்கிரஸ் கட்சி, "பாஜகவும் சூதாட்ட விடுதிகளும் கூட்டாளிகளாகச் செயல்படுகின்றனர்" என்று குற்றம்சாட்டியது.