This Article is From Mar 18, 2019

லோக்சபா தேர்தலுக்கான அதிமுக பட்டியலில் இடம்பெற்ற ஒரேயொரு பெண் வேட்பாளர்!

அதிமுக-வின் மரகதம் குமரவேலுக்கு மட்டும்தான் இந்த முறை காஞ்சிபுரத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான அதிமுக பட்டியலில் இடம்பெற்ற ஒரேயொரு பெண் வேட்பாளர்!

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, 12 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது

Chennai:

எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கு அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முறை ஆளுங்கட்சி சார்பில் ஒரேயொரு பெண் வேட்பாளர்தான் தேர்தலில் போட்டியிடுகிறார். திமுக தரப்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் இரண்டு பெண் வேட்பாளர்கள் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

அதிமுக-வின் மரகதம் குமரவேலுக்கு மட்டும்தான் இந்த முறை காஞ்சிபுரத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, 12 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போதோ 5 சதவிகித இடம்தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

தற்போது பதவியில் இருக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் விஷ்ணுவர்தன் ஆகியோர் அடங்குவர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியனுக்கும் இந்த முறை சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 20-ல் தான் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளில் பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாமக தரப்பும், அவர்களுகுக ஒதுக்கப்பட்ட 7-ல் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி தொகுதியில் இருந்து அன்புமணி, மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெண்களுக்கு பாமக, எந்தத் தொகுதியையும் ஒதுக்கவில்லை. 

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, ‘லேடியா மோடியா' என்ற முழக்கத்தை முன் வைத்துத் தேர்தலைச் சந்தித்தது. மொத்தம் இருக்கும் 40-ல் 37 இடங்களை கைப்பற்றி வரலாறு படைத்தது அதிமுக. ஆனால், இந்த முறை அது சாத்தியமா என்பது சந்தேகமே. 

காரணம், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கி தனியாக தேர்தலை சந்திக்கவிருப்பதால், அதிமுக வாக்கு வங்கி சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக தினகரன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக-வை பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகைச் சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுக வாக்கு சிதறும் என்பதை அறிந்துதான், அக்கட்சியின் தலைமை பாமக, பாஜக, தேமுதிக என்கின்ற பலமான கூட்டணியை அமைத்துள்ளது. 

மக்களவை தொகுதிப் பட்டியலுடன் சேர்த்து அதிமுக, 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலின் முடிவுகள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தப்பிக்குமா என்பதை முடிவு செய்யும். காரணம், தற்போது சட்டமன்றத்தில் அதிமுக-வுக்கு பெரும்பான்மையைப் பெற 4 சீட்கள் குறைவாக உள்ளன. எனவே, இடைத் தேர்தலில் கணிசமான வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது. இடைத் தேர்தலிலும் பாஜக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகளுடனான கூட்டணி தொடரும் என்று அதிமுக கூறியுள்ளது. 


 

.