சென்னை: சட்டவிரோத தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி நடைப்பெற உள்ளதால், மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உறவினரான தயாநிதி மாறன், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது, அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் குழுமத்திற்கு பயன்படுத்தியது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கில், மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது போதுமான சாட்சி இல்லாததால், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதனை அடுத்து, சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி சிபிஐ மேல் முறையீட்டு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து ஓராண்டுக்குள் இந்த வழக்கை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனவே, சிபிஐ நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஆர்.வசந்தி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி குற்றப்பதிவு தாக்கல் செய்யப்படும் எனவும், அன்றைய தினத்தில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)