ஐ.நா.வின் முடிவை பிரான்ஸ் நாடும் வரவேற்றிருந்தது
United Nations,: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றிருக்கிறது. இதேபோன்று பிரான்ஸ் அரசும் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. சமீபத்தில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர்.
ஜெய்ஷ் அமைப்பின் தலைவராக மசூத் அசார் செயல்பட்டு வருகிறார். அவர் பாகிஸ்தானில் தங்கியுள்ளார். அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு இருந்து வரும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் சீனா, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு முட்டுக் கட்டை போட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று மசூத் அசார் ஐ.நா.வால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அமெரிக்காவும், பிரான்சும் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், மசூத் அசார் மீது ஐ.நா. எடுத்திருக்கும் முடிவை அமெரிக்க வரவேற்பதாக கூறியுள்ளார்.
சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் மசூத் அசாரின் சொத்துக்கள் உலகில் எங்கிருந்தாலும் முடக்கப்பட்டு விடும். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முடியாது. அல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் ஏற்கனவே சர்வதேச தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.