ஹைலைட்ஸ்
- டெல்லியின் நன்கலோய் கம்ருதீன் நகரில் தான் தீ விபத்து ஏற்பட்டது
- இரவு முழுவதும் தீ அணைக்கும் பணி நடந்தது
- இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதவும் இல்லை
New Delhi: டெல்லியின் நன்கலோய் கம்ருதீன் நகரில் இருக்கும் அமர் காலனியில் நேற்றிரவு 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமர் காலனியில் இருக்கும் பிளாஸ்டிக் குடோனில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிந்த உடனேயே 25 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அவர்கள் இரவு முழுவதும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
இதைப் போன்ற ஒரு தீ விபத்து கடந்த மாதம் மால்வியா நகரில் ஏற்பட்டது. மிகுந்த ஜன நெரிசல் இருக்கும் மால்வியா நகரின் ரப்பர் குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் தான் அந்த தீ விபத்தும் ஏற்பட்டது. அப்போது, தீயை கட்டுக்குள் கொண்டு வர 80 தீயணைப்பு வண்டிகள் போராடின.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியின் பவானா தொழிற்சாலைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிந்தனர். தொடர்ந்து டெல்லியின் நெருக்கமான பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.