மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா என்ற பிரபல சமையல் நிகழ்ச்சியில், கோவையை பூர்வீகமாகக் கொண்ட சசி செல்லையா என்பவர் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர், ஆஸ்திரேலியாவின், அடிலைடில் சிறைக்காவலராக பணியாற்றி வருகிறார். இதற்கு 12 ஆண்டுகள் சிங்கப்பூர் காவல் துறையிலும் பணியாற்றியுள்ளார். 39 வயதாகும் சசி மாஸ்டர் செஃப் ஆஸ்திரிலேயா சீசன் 10ன் பட்டத்தையும், 2,50,000 ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசையும் வென்றார்.
உலக அளவில் பிரசித்தி பெற்ற பல முன்னணி செஃப்கள் பங்கேற்ற இந்த சீசனின் இறுதிப் போட்டியில் 100க்கு 93 மதிப்பெண்கள் பெற்று சசி வென்றுள்ளார். இறுதி போட்டியில் அவரோடு போட்டியிட்ட பென் போர்ஸ் 77 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட சசி “ ஊக்குவித்தல், ஆதரவளித்தல், எனது பலம் என எல்லாம் என் குடும்பம் தான்” என பதிவிட்டிருக்கிறார். மற்றொரு பதிவில் “ உலக அளவில் எனக்கு கிடைத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. விரைவில் அறிவிக்கிறேன்” என்று வெற்றி பெற்ற கையுடன் புதிய அத்யாயத்தில் இறங்கியுள்ளார் சசி.
பரிசுத் தொகையை வைத்து, இந்திய - தெற்காசிய நாடுகளின் உணவு வகைகளை இணைத்து ஒரு புதிய உணவகம் திறக்கும் திட்டத்தில் இருக்கிறார் சசி. அதில், சிறைவாசம் அனுபவித்து வெளியில் வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் உயர்ந்த நோக்கமும் இருக்கிறது.
இந்த போட்டியின் இறுதிச் சுற்றில், மிகப் பிரபலமான செஃப்களான, மேட் பிரெஸ்டன், ஜார்ஜ் கேலம்பாரிஸ் மற்றும் கேரி மெயின் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இரண்டாம் இடம் பிடித்த பென் போர்ஸுக்கு 40,000 ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசாக் கிடைத்தது.