Lok Sabha Elections 2019: உத்தரபிரதேச மக்கள் நினைத்தால் பிரதமர் மோடியை ஆட்சியை விட்டு தூக்க முடியும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவரும் எதிர்பார்க்காத வகையில் உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்துள்ளன.
இதனால் உத்தரபிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் – சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் என மும்முனை போட்டி நிலவுகிறது. மற்ற மாநிலங்களைவிட உத்தர பிரதேசத்தில்தான் அதிக மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. நாட்டின் ஆளும் கட்சியை தீர்மானிப்பதில் இங்கிருக்கும் 80 தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உத்தரபிரதேசத்தில்தான் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி நிறுத்தப்படுவாரா என பரவலாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் மோடியை எச்சரித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட் பதிவில், ‘உத்தர பிரதேசம் முழுவதும் சுற்றும் மோடி, தன்னை நாட்டின் பிரதமராக உத்தரபிரதேசம்தான் உருவாக்கியது என்று கூறுகிறார். அவர் சொல்வது சரிதானா? ஆனால் இங்கிருக்கும் 22 கோடி மக்களுக்கும் அவர் துரோகம் செய்தது எதனால்?. உத்தர பிரதேசம் மோடியை பிரதமர் ஆக்கியது என்றால் அதே உத்தர பிரதேசம் மோடியை பதவியை விட்டு தூக்கவும் முடியும்.' என்று கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 இடங்களை கடந்த தேர்தலில் கைப்பற்றியது. இங்கு 7 கட்டங்களாக கடந்த 11-ம்தேதி தொடங்கிய வாக்குப்பதிவு மே 19 வரை நீடிக்கிறது.