New Delhi: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய் பிரகாஷ் சிங்கை கட்சியின் தலைவர் மாயாவதி கட்சியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய் பிரகாஷ் சிங் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அரசியலில் வெற்றி பெறமாட்டார். அவர் அவரது அம்மா சோனியாகாந்தியின் முகச்சாயலில் இருப்பதால் வெளிநாட்டவர் போல் இருக்கிறார். அதனால் அவரால் பிரதமராக முடியாது என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
மேலும், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாயவதி தான் பிரதமர் வேட்பாளர். தலித் மக்களின் ஆதரவு மாயவதிக்குத் தான் உண்டு என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து மாயாவதி, ஜெய் பிரகாஷ் சிங்கை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
இதுகுறித்து மாயவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெய் பிரகாஷ் சிங்கின் கருத்து தனிப்பட்டது. ஆனால், கட்சியின் கொள்கைகளை மீறீயது. இதனால், அவரை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்களன்று லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில், மற்ற மாநிலங்களில் கூட்டணி அறிவிக்கப்படும் வரை எந்த கட்சித் தலைவரையும் விமர்சிக்ககூடாது என்று தெரிவித்து இருந்தார். சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மீது கூட்டணி சேரும் நடவடிக்கையில் பகுஜன் சமாஜ் முன்னேற்பாடுகள் எடுத்து வருவதால், மாயவதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.