हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 12, 2018

‘பாஜக-வை வீழ்த்த ம.பி-யில் காங்கிரஸுக்கு ஆதரவு!’- மாயாவதி பளீச்

Final election results 2018: மாயாவதி, ‘பாஜக-வை ஆட்சி அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க காங்கிரஸுக்கு, ராஜாஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஆதரவு கொடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்

Advertisement
இந்தியா

மத்திய பிரதேசத்தின் நிலை குறித்து காங்கிரஸ் தரப்பில் கமல்நாத், மாயாவதியிடம் தெரிவித்தார். இதையடுத்து மாயாவதி, கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களை டெல்லிக்கு அழைத்தார்

New Delhi:

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ‘பாஜக-வை ஆட்சி அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க காங்கிரஸுக்கு, ராஜாஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஆதரவு கொடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘எங்களின் நோக்கம், பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான். அதற்காக, நாங்கள் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்போம்' என்றுள்ளார். மத்திய பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114-ல் வெற்றி பெற்றது. பாஜக 109 இடங்களைக் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க 116 தொகுதி வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில்தான் மாயாவதி, காங்கிரஸுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

மாயாவதி மேலும் பேசுகையில், ‘நாங்கள் இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத் தான் போட்டியிட்டோம். எனவே, ராஜஸ்தானிலும் காங்கிரஸுக்கு ஆதரவாகவே நாங்கள் இருப்போம்' என்று தெரிவித்தார்.

அவர் காங்கிரஸ் குறித்தும் விமர்சனம் வைக்காமல் இல்லை, ‘காங்கிரஸ் கட்சி மட்டும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டிருந்தால், பாஜக என்றொரு கட்சியே வந்திருக்காது. காங்கிரஸ்தான் இந்தியாவின் பல மாநிலங்களை ஆட்சி செய்தது. ஆனால், அந்தந்த மாநில பிராந்திய கட்சிகள், காங்கிரஸை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தன. இதற்குக் காரணம் காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்கே' என்று மாயாவதி சாடினார்.

மத்திய பிரதேசத்தின் நிலை குறித்து காங்கிரஸ் தரப்பில் கமல்நாத், மாயாவதியிடம் தெரிவித்தார். இதையடுத்து மாயாவதி, கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களை டெல்லிக்கு அழைத்தார். அதைத் தொடர்ந்துதான், காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாயாவதி எடுத்துள்ளார்.

Advertisement

மத்திய பிரதேசத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருக்கு இடையில் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி இறுதியாகவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் டெல்லியில் சந்தித்து அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. இந்தக் கூட்டத்திலும் மாயாவதி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement