6 பிஎஸ்பி எம்எல்ஏக்களை காங்.,க்கு எதிராக வாக்களிக்க கூறும் மாயாவதி!
Jaipur: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் காங்கிரசில் இணைந்த எம்எல்ஏக்களை தற்காலிகமாக முடக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை அனுமதிக்க மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வரும் ராஜஸ்தானின் ஒரு நீதிபதி அமர்வு இறுதி முடிவெடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, ஆறு எம்எல்ஏக்கள் இணைப்பை எதிர்த்து பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்த மனுக்களை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி கடந்த மாதம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது எம்எல்ஏக்களை அபகரித்ததற்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சச்சின் பைலட் தனது போர்க்கொடியை திரும்பபெற்றார். இதில், மூன்று பேர் கொண்ட குழு அவரது குறைகளை ஆராயும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஒரு பெரும் திருப்பமாக, இன்று தொடங்கும் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக பாஜக நேற்று அறிவித்தது. இதனால், ஆளும் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக கூறியது.
சட்டசபையில் முதல்வர் ஒரு நம்பிக்கை தீர்மானம் கோரினால், அது விதிகளின் படி, வேறு எந்த உறுப்பனர் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் விட முன்னதாக இருக்கும்.
ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில், பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதலாக ஒரு உறுப்பினரின் ஆதரவு 102 ஆக மட்டும் இருந்த நிலையிலே முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருந்தார். இந்நிலையில், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பியதால், கெலாட்டின் பலம் 125 ஆக இருக்கும்.