தேமுதிக, திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் மதிமுக-வுக்கு, திமுக ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்குவது என்று முடிவு செய்துள்ளது. இது குறித்த உடன்படிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். மதிமுக-வுடன் ஒப்பந்தம் போட்ட நிலையில், இனி திமுக, கூட்டணியில் யாரையும் சேர்த்துக் கொள்ளாது என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. மீதம் இருக்கும் 20 தொகுதிகளில் திமுக-வே போட்டியிடும் என்று தெரிகிறது.
திமுக கூட்டணியில் முதன்முதலாக அதிகாரபூர்வமாக இணைந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிக்கு திமுக, 10 நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கியது. அதற்கு அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. இறுதியாக மதிமுக-வுக்கு 1 மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ராஜ்யசபா சீட் மூலம் வைகோ, மீண்டும் மாநிலங்களவை எம்.பி-யாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டதால், இனி கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்று திமுக தலைமை தெரிவித்துவிட்டது. எனவே தேமுதிக, திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் சிபிஎம்… தொகுதி ஒதுக்கீடு உறுதியானது!