This Article is From Jul 09, 2019

“இந்த விஷயத்தைத்தான் முதலில் கையிலெடுப்பேன்!”- மாநிலங்களவை எம்.பி-யாக உள்ள வைகோ பேட்டி

முன்னதாக தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், எம்.பி ஆவதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்பட்டது.

Advertisement
தமிழ்நாடு Written by

“எனது வேட்பு மனு ஏற்கபடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது."

திமுக ஆதரவோடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். அவர் சில நாட்களுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், எம்.பி ஆவதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்பட்டது. வைகோவின், வேட்பு மனுவையும் தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என்று கூறப்பட்டது. இதை சமாளிக்கும் வகையில், ஒருவேளை வைகோவால் போட்டியிட முடியவில்லை என்றால், அதற்கு பதில் இன்னொருவர் களத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணியது திமுக. தொடர்ந்து என்.ஆர்.இளங்கோவும் திமுக சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை இன்று நடந்தது. இதில் வைகோவின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “எனது வேட்பு மனு ஏற்கபடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இருந்தாலும் அனைத்துத் தரப்பு கருத்துகளை கேட்டேன். சுதந்திர இந்தியாவில் நான்தான் தேசத் துரோக வழக்கில் முதன்முதலாக குற்றம் நிரூபிக்கப்பட்டவன். ஆகவேதான், மாற்று ஏற்பாடாக என்.ஆர்.இளங்கோவை நிற்கச் சொல்லி தளபதி ஸ்டாலினிடம் நானே வற்புறுத்தினேன். ஆனால், எனது வேட்பு மனு ஏற்கப்பட்டது மகிழ்ச்சி.” என்றவரிடம், ‘எம்.பி-யானவுடன் எந்த விஷயத்தில் முதலில் கையிலெடுப்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “மாநிலங்களவை நான் ஒரு தனி உறுப்பினர். எனக்கு அவ்வளவு நேரம் கொடுக்கப்படாது. இருந்தாலும், என்னால் இயன்ற வரை நேரம் கேட்ட பேசப் பார்ப்பேன். இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்கவும் நான் தீர்க்கமாக பேசுவேன்” என்று கூறியுள்ளார். 

Advertisement

2009 ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை என்றால், இந்தியா, ஒரே நாடாக இருக்காது” என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிராகத்தான் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்நதது திமுக-வினர்தான். அப்போது மதிமுக - திமுக எதிரெதிர் முகாமில் இருந்தன.

Advertisement