வெளிமாநில தொழிலாளர்களை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை: எடப்பாடி
வெளிமாநில தொழிலாளர்களை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்.25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடைகள், கட்டுமான பணிகள், பொது போக்குவரத்து என அனைத்தும் முடங்கின.
இதனால், வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல், பணமும், உணவும் இல்லாமல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு நடந்தே சென்றனர். இதனால் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் ஒரு பகுதியாக வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணி புரியும் தொழிலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, இதுவரை 9 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 சிறப்பு ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெளி மாநில தொழிலாளர்களும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் வீண் வதந்திகளை நம்பி வெளியே வராமல் வெளி மாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.