ராகுல் காந்தியின் சமீபத்திய அரசாங்கத்தின் மீதான தாக்குதல்கள் பொருளாதாரம் மற்றும் வேலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளன
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு-ஏழு மாதங்களுக்கு இந்த நெருக்கடி இந்த நெருக்கடி தொடரும் என்றும், தொடக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்த தனது கணிப்பை ஊடகங்கள் கேலி செய்தததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தியா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது. இது வெளிப்படையானது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், “கோவிட் -19 காரணமாக பெரும் இழப்பு ஏற்படும் என்று நான் நாட்டை எச்சரித்தபோது ஊடகங்கள் என்னை கேலி செய்தன. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், நான் சொல்வதைக் கேட்க வேண்டாம். ஆனால், இன்று நிலைமையை நீங்கள் காணுகிறீர்கள். நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் ஆறு ஏழு மாதங்கள் காத்திருங்கள்.” என கூறியுள்ளார்.
வேலையின்மை மற்றும் புதியதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததற்கான காரணத்தையும் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.
“90 சதவிகிதமான வேலை வாய்ப்புகள் சிறு தொழில்கள், விவசாயிகள் என அமைப்பு சாரா தொழில்களில்தான் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி இந்த அமைப்பினை சீர்குலைத்துவிட்டார். நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைவதை நீங்கள் காண்பீர்கள். மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) லாக்டவுனுக்கு பிறகு முற்றிலுமாக அழிக்கப்படும்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
COVID-19 க்கு எதிரான நாட்டின் போராட்டத்தின் மத்தியில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஆகஸ்ட் இறுதி வரை வணிக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் திருப்பிச் செலுத்துவதற்கான தடையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்ததை குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தி, அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நீட்டிக்கப்பட்டு வரும் லாக்டவுன் வணிகங்களை பெரிதும் பாதித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாக ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பொருளாதாரம் சார்ந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, “கடந்த நான்கு மாதங்களில் சுமார் இரண்டு கோடி மக்கள் வேலை இழந்தனர் என்றும், "வேலையின்மை பற்றிய உண்மையை" நாட்டிலிருந்து மறைக்க முடியாது.” என்றும் டிவிட் செய்திருந்தார்.