This Article is From May 10, 2019

அயோத்தி வழக்கு: ஆக.15 வரை மத்தியஸ்தர குழுவுக்கு அவகாசம்!

Ayodhya case: நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய குழுவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.

அயோத்தி வழக்கு: ஆக.15 வரை மத்தியஸ்தர குழுவுக்கு அவகாசம்!

Ayodhya case: அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர குழு நம்பிக்கை மிக்கது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

New Delhi:

அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க மத்தியஸ்தர குழுவுக்கு ஆக.15 வரை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய மத்தியஸ்த குழு கேட்டுக்கொண்டதன் பேரில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கியது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இதன் முடிவில் சமரச குழு அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமரச குழு 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சமரச குழுவினர் தங்களது இடைக்கால அறிக்கையை நேற்று சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மத்தியஸ்த குழு கேட்டுக்கொண்டதன் பேரில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கியது.

மேலும், 6 நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த விசாரணையில், மத்தியஸ்தர்கள் குழு நம்பிக்கையானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

.