This Article is From Mar 04, 2019

பாகிஸ்தானில் காயமடைந்த அபிநந்தன்… மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை!

இந்திய விமானப்படை விங் கமாண்டர், அபிநந்தன் வர்தமனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் காயமடைந்த அபிநந்தன்… மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை!

இந்த முதற்கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து அடுத்து வரும் 10 நாட்களுக்கு, அபிநந்தன் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார் எனப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • அபிநந்தனுக்கு முதுகுப் பகுதியிலும் காயம் உள்ளது
  • உளவுசாதனம் ஏதாவது அபிநந்தன் உடலில் இருக்கிறதா என்றும் சோதனை செய்யப்பட்டது
  • பாகிஸ்தான் அபிநந்தனை மன ரீதியாக துன்புறுத்தியது, இந்திய விமானப்படை
New Delhi:

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர், அபிநந்தன் வர்தமனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் அபிநந்தனை பாராஷூட் மூலம் தரையிறங்கிய பின்னர், அங்கிருந்த உள்ளூர் வாசிகள், அவரை சரமாரியாக தாக்கினர். அதில்தான் இந்த காயம் ஏற்பட்டிருக்கும் என்று தெரிகிறது. 

அதேபோல, முதுகுத் தண்டுப் பகுதியின் அடியிலும் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அபிநந்தனின் விமானம் சுடப்பட்டதைத் தொடர்ந்து, பாராஷூட் மூலம் தப்பிக்க முயன்றார். அப்போதுதான், முதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு காயம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த மருத்துவ பரிசோதனையானது, அபிநந்தன் உடலில் எதாவது உள் காயம் உள்ளதா என்பதையும், உளவு பார்க்க சாதனங்கள் எதாவது பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் இருக்கும் ரெஃபரல் மருத்துவமனையில் இந்த பரிசோதனை நடந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. 

இந்த முதற்கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து அடுத்து வரும் 10 நாட்களுக்கு, அபிநந்தன் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார் எனப்படுகிறது. 

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிடம் அபினந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான். 

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன. அதில்தான் அபினந்தன், பாகிஸ்தான் தரப்பிடம் சிக்கினார். இதையடுத்து பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அபினந்தனை நாங்கள் விடுவிக்கிறோம்' என்று பேசினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற சூழல் சற்றுத் தணிந்துள்ளது.

 

மேலும் படிக்க:  இளைஞர்கள் ஆர்வம்! - இந்திய முழுக்க பிரபலமாகிறது அபிநந்தன் ‘மீசை'!!

.