This Article is From Dec 07, 2018

தஞ்சை பெரிய கோயிலில் ‘வாழும் கலை’ அமைப்பின் தியான நிகழ்ச்சி: தமிழ் அமைப்பினர் கொந்தளிப்பு!

தஞ்சாவூரில் சோழர் காலத்து ஆலயமான, ‘பெரிய கோயிலில்’ இன்றும் நாளையும் ‘விஞ்ஞான பைரவம்’ என்ற தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது

தஞ்சை பெரிய கோயிலில் ‘வாழும் கலை’ அமைப்பின் தியான நிகழ்ச்சி: தமிழ் அமைப்பினர் கொந்தளிப்பு!

தஞ்சாவூரில் சோழர் காலத்து ஆலயமான, ‘பெரிய கோயிலில்' இன்றும் நாளையும் ‘விஞ்ஞான பைரவம்' என்ற தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது. தனியார் அமைப்பான ‘வாழும் கலை' இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது. இதையடுத்து, பெரிய கோயிலின் புராதனத் தன்மை பாதிக்கும் என்று கூறி பல தமிழ் அமைப்பினர், நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல் துறை கைது செய்துள்ளது. வாழும் கலை அமைப்பின் சார்பில் இந்த விஷயம் குறித்து கூறுகையில், ‘நாங்கள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே நிகழ்ச்சியை நடத்துகிறோம்' என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலில் தனிப்பட்ட மதம் சார்ந்த அமைப்பு ஒன்று நிகழ்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தக் கோயிலைப் பாழ்படுத்துவதற்கே அது வழிவகுக்கும். எனவே டிசம்பர் 7&8 தேதிகளில் நடக்கவுள்ள அந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை, தமிழகத்தின் பிரதான கட்சிகளும் கையிலெடுக்கும் பட்சத்தில், விஷயம் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

.