தமிழகத்தைச் சேர்ந்த பூரண சுந்தாரி தனது நான்காவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.
ஹைலைட்ஸ்
- பூரண சுந்தரி எனும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி தேர்வில் தேர்ச்சி
- இவர் 286வது இடத்தினை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- முகமது கைஃப் கனவுகளை துரத்துவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என ஊக்கமளிப்பு
சமீபத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தமிழகத்திலிருந்து சிலர் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தாலும், குறிப்பிடத்தக்கதாக மதுரையை சேர்ந்த பூரண சுந்தரி எனும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். இந்த தேர்வில் இவர் 286வது இடத்தினை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் “சுந்தரியின் ஊக்கத்திற்கு பெற்றோர்கள் காரணம். வாசிப்பதற்கு ஏற்றவாறு புத்தகங்களை ஒலியாக மாற்றி கொடுத்துள்ளனர். இதுவே சுந்தரியின் வெற்றிக்கு அடிப்படை. உங்கள் கனவுகளைத் துரத்துவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்.” என டிவிட்டரில் சுந்தரியை பாராட்டியுள்ளார்.
மதுரையில் வசிக்கும் சுந்தரி தனது நான்காவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் 286 வது இடத்தைப் பெற முடிந்தது. “என் பெற்றோர் எனக்கு நிறைய ஆதரவளித்துள்ளனர், எனது வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என அவர் செய்தி நிறுவனமான ANIக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த தேர்வில் பெற்றி பெற தனக்கு ஐந்து வருட கடின உழைப்பு தேவைப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
அதேபோல “நான் 11 ஆம் வகுப்பில் இருந்தபோது ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்தேன். கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் அதிகாரம் போன்ற துறைகளில் பணியாற்ற விரும்புகிறேன்” என இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் சுந்தரி குறிப்பிட்டிருந்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வு நாட்டில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 1,000 க்கும் குறைவான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர்.