கிருஷ்ணன் என்ற பெயரை அவர் கொண்டிருந்தாலும், ட்ரம்ப் மீது அவர் கொண்டுள்ள அன்பினால் கிராம மக்கள் அனைவரும் அவரை 'ட்ரம்ப் கிருஷ்ணா' என்று அழைக்கின்றனர்
தெலங்கானாவில் ஒரு ‘வித்தியாசமான' கடவுளுக்குக் கடந்த 2 ஆண்டுகளாகச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
புசா கிருஷ்ணா என்னும் அந்த நபர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு கடவுள் என்று நம்புகிறார். இதனால் கிருஷ்ணா, தனது சொந்த கிராமத்தில் ட்ரம்பின் 6 அடி சிலையை உருவாக்கி, அதற்குக் கடந்த 2 ஆண்டுகளாகப் பூஜைகள் செய்து வருகிறார்.
கிருஷ்ணா, தனக்கு ட்ரம்ப் குறித்தான ஒரு ஞானோதயம் தோன்றியதாகவும், அவரால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையில் அமைதி நிலவுவதாகவும் நம்புகிறார்.
30 வயதான கிருஷ்ணா, விவசாயம் செய்து வருகிறார். இன்று இந்தியாவுக்கு வரும் அதிபர் ட்ரம்பை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் கிருஷ்ணா.
இது குறித்து கிருஷ்ணா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'இந்தியா - அமெரிக்கா உறவு நல்லதொரு உறவாக நீடிக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் டொனால்டு ட்ரம்பிற்காக நான் விரதம் இருந்து அவரை ஒரு கடவுளைப் போல நினைத்து வழிபடுகிறேன். ட்ரம்பின் இந்திய வருகையின்போது அவரை சந்திக்கவைத்து தனது கனவை அரசு நிறைவேற்ற வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணன் என்ற பெயரை அவர் கொண்டிருந்தாலும், ட்ரம்ப் மீது அவர் கொண்டுள்ள அன்பினால் கிராம மக்கள் அனைவரும் அவரை 'ட்ரம்ப் கிருஷ்ணா' என்று அழைக்கின்றனர். கிருஷ்ணாவின் குடியிருப்பு 'ட்ரம்ப் ஹவுஸ்' என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணாவின் இந்த செயலுக்குக் கிராம மக்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும், மாறாக அவரது பக்தியைப் பாராட்டி வருகின்றனர் என்று கிருஷ்ணாவின் நண்பர் ரமேஷ் ரெட்டி கூறினார்.