நாம் செய்யக்கூடிய தானங்களை பொருத்துதான் நம் கர்ம பலன்களானது அமையும் என்று அன்றே நம் முன்னோர்கள் சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களின் மூலம் இவ்வுலகிற்கு சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர். கொடை உள்ளம் என்பது இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய குணாதிசியங்களுள் ஒன்று. ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதார பின்புலன்களை பொருத்தே தானங்கள் வேறுபடுகின்றன. ஆனால், எல்லோராலும் செய்யக்கூடியது இரத்த தானம் அல்லது குருதி கொடை. எங்கோ ஓர் உயிர் வாழ நாம் காரணமாக இருக்க குருதி கொடை செய்யலாம். அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பை சென்னை வாசிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் “ROTARY CLUB OF CHENNAI NOBLE HEARTS" மாபெரும் இரத்த தான முகாமை நாளை நடத்த இருக்கிறது.
இந்த இரத்த தான முகாமின் நிகழ்விற்கு ‘B+ve' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த இரத்த தான முகாமின் முன்னேற்பாடு நிகழ்வானது ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் தலைமையில், ஸ்ரீ ராமச்சந்திரா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக போரூரில் இருக்கக்கூடிய “MAANSAROVAR HONDA” நிறுவனத்தில் இரத்த தான முகாம் துவங்க இருக்கிறது. இதனை ராஜ்யசபா உறுப்பினரான திரு. விஜயக்குமார் அவர்கள் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்கத்தில் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஆரோக்கிய நல அமைப்புகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.