தொடர்ந்து மற்ற தொழிலாளிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது
Shillong: மேகாலயா மாநிலத்தில் ‘எலி வலை' சுரங்கத்தில் கடந்த 42 நாட்களாக, சுரங்கத்துக்கு உள்ளே சிக்கிய 15 தொழிலாளிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலைநில் இன்று முதன்முறையாக ஒரு தொழிலாளியின் உடல் மட்டும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் படையினர், தொழிலாளியின் உடலை மீட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது மீட்கப்பட்டுள்ள உடல், கடந்த வாரமே மீட்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதை எடுக்க முற்படும்போது, அது தவறி மேலும் சுரங்கத்துக்குள் விழுந்துவிட்டது. ஆனால், அந்த உடலை இன்று மீட்புப் படையினர் வெற்றிகரமாக எடுத்துள்ளனர்.
தொடர்ந்து மற்ற தொழிலாளிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. டிசம்பர் 13 ஆம் தேதி ஜனிதா மலைத் தொடரில் உள்ள, சட்ட விரோத நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 15 தொழிலாளிகள் திடீர் நீர் வரத்துக் காரணமாக சிக்கிக் கொண்டனர்.
அப்போது முதல் அவர்களை மீட்கும் பணி மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடந்து வருகிறது. அதே நேரத்தில் மீட்புப் பணி மிக மெத்தனமாக நடந்து வருவதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. சுரங்கத்துக்குள் திடீர் வெள்ளம் வருவதற்கு முன்னர், 5 சுரங்கத் தொழிலாளிகள் மயிரிழையில் தப்பித்தனர்.