இதுவரை சுரங்கத்திலிருந்து 28 லட்சம் லிட்டர் தண்ணீர் இரைக்கப்பட்டுள்ளது
New Delhi: டிசம்பர் 13 ஆம் தேதி மேகலாயாவில் உள்ள ‘எலி வலை' நிலக்கரி சுரங்கத்தில் 15 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், ஒரு சுரங்கத் தொழிலாளியைக் கூட கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் இது சம்பந்தமான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ‘சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். அதிசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது' என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளது.
370 அடி ஆழம் கொண்ட சட்டத்துக்கு புறம்பான சுரங்கத்தில் மாட்டியுள்ளவர்கள் பற்றி நீதிமன்றம் மேலும் கூறுகையில், ‘மேகலாயா மற்றும் மத்திய அரசுகள், உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க வல்லுநர்களின் உதவியை நாட வேண்டும்' என்று வழிகாட்டியுள்ளது.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம், சட்டத்துக்கு விரோதமாக இயங்கி வரும் சுரங்கங்கள் குறித்து இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேகலாயா அரசிடம் கேள்வி கேட்டது.
இதுவரை சுரங்கத்திலிருந்து 28 லட்சம் லிட்டர் தண்ணீர் இரைக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து அருகிலிருக்கும் நதியிலிருந்து நீர், சுரங்கத்துக்குள் வருவதால் தண்ணீர் இரைக்கப்பட்டும் பயனில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கடற்படை, தேசிய பேரிடர் படை, எஸ்.டி.ஆர்.எஃப், தீயணைப்புப் படை உள்ளிட்ட அமைப்புகளின் 200 வீரர்கள் தொடர்ந்து சுரங்கத்தில் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இடமும் சூழலும் மீட்புப் பணிக்கு சற்றும் ஒத்துழைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.