This Article is From Nov 30, 2018

மேகதாது அணைக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்!

மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

மேகதாது அணைக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்!

தமிழகத்துக்கு கர்நாடக அரசு தரவேண்டிய காவிரி நீர் பங்கீட்டு அளவு தொடர்பாக அண்மையில் இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை வகுத்தளித்தது. இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அம்மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது.

அணை கட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கிறோம், அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இதைத்தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது.

கர்நாடக அரசின் இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால், இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கும் மத்திய அரசின் ஒப்புதலை அவர்கள் பெற்றுவிட்டால், மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.

இந்நிலையில் கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
 

.