சோக்சியை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு தொடர்ந்து முயன்று வருகிறது
New Delhi: பல்லாயிரம் கோடி பண மோசடி செய்த வழக்கில் சிக்கி, இந்தியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் மெஹுல் சோக்சி, அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.
பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சிலரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தேடி வருகிறது. நிரவ் மோடியுடன் தேடப்பட்டு வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் சோக்சியும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நிரவ் மோடி குடும்பம் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. அவர்கள் மோசடியில் ஈடுபட்ட விஷயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தெரியவந்தது. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் கொடுத்தது பிஎன்பி. ஆனால், அவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டனர். அதன் பிறகு நிரவ் மோடி மற்றும் சோக்சி உள்ளிட்டவர்களின் பாஸ்போர்டுகளையும் இந்திய அரசு முடக்கவிட்டது.
இது ஒருபுறமிருக்க சோக்சி, கரீபியன் தீவுகளில் இருக்கும் ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது ஆன்டிகுவா அரசு, இந்திய அரசிடம் சோக்சி குறித்து விசாரித்துள்ளது. அந்நேரத்தில் சோக்சி மீது எந்த வழக்கும் இல்லாததால், நவம்பர் மாதம் அவருக்கு ஆன்டிகுவா குடியுரிமை வழங்கப்பட்டது. பின்னர், ஜனவரி 15 ஆம் தேதி அவர் ஆன்டிகுவாவின் குடிமகனாக ஆனார். ஜனவரி 29 ஆம் தேதி தான் பிஎன்பி-யில் செய்த பண மோசடி குறித்து தெரிய வந்தது.
தொடர்ந்து சோக்சியை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அவர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ‘அமலாக்கத் துறையால் என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. எனது சொத்துகளை அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக முடக்கியுள்ளனர்’ என்று கூறினார்.
மீண்டும் தற்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சோக்சி. அதில் பேசும் அவர், ‘எனது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. எனது நிறுவனப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. எல்லாமே ஒரே வாரத்தில் நடந்து முடிந்துவிட்டன. நான் மருத்துவமனையிலிருந்து திரும்பி வருவதற்குள் ஒருவர் கூட என் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்ற தகவல் வருகிறது. ஒரு தவளான புகாரினால் நான் இப்போது பயத்திலேயே வாழ்ந்து வருகிறேன். எனது போஸ்போர்ட்டை எக்காரணம் கொண்டும் சமர்பிக்க மாட்டேன். எதற்காக என் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் நான் இறங்கி வர மாட்டேன்’ என்றவர்,
தொடர்ந்து, ‘எனது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு என்னவாகும்? எனது ஊழியர்களின் நிலைமை என்னவாகும்? ஒரே நாளில் என் நிறுவனத்தை இழுத்து மூடுவதற்கு முன்னர் இதைப் பற்றியெல்லாம் ஏன் யாரும் யோசிக்கவில்லை?’ என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளர்.