ஆண்டிகுவா குடிமகன் உரிமை கடந்த 2017-ல் மெகுல் சோக்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- இந்திய குடியுரிமையை கைவிட்டார் மெகுல் சோக்சி
- இந்திய பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தார்
- சோக்சியை இந்தியா கொண்டுவருவது தொடர்பான வழக்கு ஆண்டிகுவாவில் விசாரணை
New Delhi: இந்தியா கொண்டு வரப்படுவதை தவிர்ப்பதற்காக மெகுல் சோக்சி தனது பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். பஞ்சாப் தேசிய வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் வைர வியாபாரிகள் நீரவ் மோடியும், மெகுல் சோக்சியும் தேடப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரும் இந்தியாவை விட்டு தப்பிச் சென்று விட்டனர். மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டில் உள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆண்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
அவரிடம் ஆண்டிகுவா மற்றும் இந்தியாவின் குடியுரிமைகள் இருந்தன. ஒருவர் இரு குடியுரிமையை வைத்திருக்க கூடாது என்று அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், சோக்சி தனது இந்திய குடியுரிமையை விடுவதற்கு முடிவு செய்து தனது இந்திய பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
59 வயதாகும் சோக்சியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை இந்தியா கொண்டுவருவது தொடர்பான வழக்கு ஆண்டிகுவா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தம் ஆண்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இருப்பினும், காமன்வெல் உறுப்பு நாடு என்கிற முறையில், ஆண்டிகுவா சட்டப்படி சோக்சியை இந்தியா கொண்டு வர முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.