நிரவ் மோடி பெல்ஜியம் நாட்டின் தலைநகரமாக புரசெல்ஸில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- சோக்சி குறித்து ஆன்டிகுவா பிரதமர் பேசியுள்ளார்
- ரூ.13,000 கோடி பணமோசடி வழக்கில் சிக்கியவர் சோக்சி
- சோக்சியுடன் நிரவ் மோடியும் இந்த வழக்கில் சிக்கியுள்ளார்
New Delhi: பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி, பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் வைர வியபாரி மெகுல் சோக்சி. அவர் தற்போது ஆன்டிகுவா நாட்டில் குடியேறியுள்ளார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அவரது குடியுரிமை சீக்கிரமே ரத்து செய்யப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ‘தி ஆன்டிகுவா அப்சர்வர்' என்னும் செய்தி நிறுவனத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் காஸ்டன் ப்ரவுன் அளித்துள்ள பேட்டியில், “சோக்சிக்கு தற்போதைக்கு ஆன்டிகுவாவில் குடியிருக்கும் உரிமையுள்ளது. ஆனால், சீக்கிரமே அந்த உரிமை ரத்து செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
நிதி சார்ந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆன்டிகுவா அரணாக இருக்காது. அதே நேரத்தில் எந்த குற்றவாளிக்கும் உரிமைகள் உண்டு. அந்த உரிமைப்படிதான் அவர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். ஆனால், ஒரு விஷயத்தை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அவர் பயன்படுத்திய பிறகு, அவரின் குடியுரிமை ரத்து செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
பண மோசடி விவகாரத்தில் சிக்கிய சோக்சி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து தப்பித்துச் சென்றார். 6 மாத காலத்துக்கு அவர் எங்கிருந்தார் என்ற தகவலே தெரியாமல் இருந்தது. பின்னர், அவர் ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற்றது தெரியவந்தது.
எப்போது சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்பது குறித்து பேசிய ப்ரவுன், “ அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அவர் பயன்படுத்திய பிறகு, அவரின் குடியுரிமை ரத்து செய்யப்படும். இந்தியாவுக்கு அவர் அனுப்பிவைக்கப்படுவார்” என்று கூறினார்.
“இந்தியாவில் கும்பல் வன்முறை இருப்பதால் நான் அங்கு போக மாட்டேன்” என்று நீதிமன்ற வாதங்களின் போது சோக்சி கூறியது குறிப்பிடத்தக்கது.
பி.என்.பி பண மோசடி குறித்து வெளியே தெரிந்தவுடன், சோக்சி மற்றும் நிரவ் மோடியின் பாஸ்போர்ட்களை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா முடக்கியது. நிரவ் மோடி பெல்ஜியம் நாட்டின் தலைநகரமாக புரசெல்ஸில் இருப்பதாக சொல்லப்படுகிறது.