This Article is From Nov 28, 2018

‘அரசியல் நாடகம் நடத்தும் திமுக!’- அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து அதிமுக பாய்ச்சல்

திமுக, நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது

‘அரசியல் நாடகம் நடத்தும் திமுக!’- அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து அதிமுக பாய்ச்சல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு, அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து விவாதிக்க தமிழக எதிர்கட்சியான திமுக, நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

திமுக சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29.11.2018 அன்று, காலை 10:30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்' நடைபெறும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து வைகைச் செல்வன் பேசுகையில், ‘திமுக-வின் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு அரசியல் நாடகம். எங்களுக்கு முன்னர், ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, அதுவும் மத்திய அரசின் கூட்டணியிலிருந்த திமுக, அப்போது அழுத்தம் கொடுத்து காவிரி விவகாரத்தில் தீர்வு காணவில்லை. ஆனால், தற்போது எதிர்கட்சிகளைக் கூட்டி ஒரு நாடகத்தை நடத்தவிருக்கிறது.

மேதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார். காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, திமுக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

ஏற்கெனவே, காவிரிப் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் 23 நாட்கள் நாங்கள் தள்ளிவைக்கும்படி நாங்கள் செய்தோம். தற்போது இருக்கும் சூழலில், நாங்கள் தொடர்ந்து எதிர்குரல் கொடுப்போம். மேலும், குளிர்காலக் கூட்டத் தொடரின் போதும், அதிமுக அரசு இது குறித்து விவாதத்தை எழுப்பும்.

மேலும், மேகதாது விஷயத்தில், மத்திய நீர் மேலாண்மை வாரியம், ஆரம்பகட்ட நடவடிக்கையைத் தான் எடுத்திருக்கிறது. இறுதி முடிவு என்பது தமிழக அரசைக் கேட்டுத் தான் எடுக்கப்படும் என்று சொல்லயிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கும்' என்று கூறியிருக்கிறார்.

.