மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. ஆனால், இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
திருச்சியில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசியதாவது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. மேகதாது அணை பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எம்.பி.க்கள் 55 பேர் பிரதமரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தோம்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, காவிரியின் குறுக்கே மத்திய அரசு மற்றும் தமிழகத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. இது தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை கேட்டு முடிவெடுப்போம் என தெளிவாக கூறியுள்ளார்.
ஆனால் கர்நாடக அரசு தன்னிச்சையாக, மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதனை மத்திய அரசும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இது வேதனை அளிக்க கூடியது. ஆட்சியாளர்கள் தமிழகத்தை பற்றி சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.