This Article is From Aug 10, 2018

டிரம்பின் மாமியார் மாமனாருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கியதில் சர்ச்சை

சங்கிலித் தொடராக வெளிநாட்டினர் குடியேறி, அமெரிக்காவைச் சேர்ந்த பாட்டாளி மக்களின் வேலைக்கு வேட்டு வைக்கின்றனர் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார்

டிரம்பின் மாமியார் மாமனாருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கியதில் சர்ச்சை

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப். இவரது பெற்றோர் விக்டர், அமலிஜா நேவ்ஸ் ஆவர். இவர்கள் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நேற்று அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர், உறவினர் ஆகியோருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுவது தடுக்கப்பட வேண்டும், அதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என டிரம்ப் கூறி வரும் நிலையில் அவரது உறவினர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுலோவேனியவில் இருந்து வந்து அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே நிரந்தரமாக வசிக்கும் உரிமையுடன் இருந்து வரும் மெலனியாவின் பெற்றோர், நேற்று குடியுரிமைப் பெற்று அதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்று அவர்களது வழக்கறிஞர் மைக்கேல் வைல்டிஸ் உறுதிசெய்துள்ளார். எனினும், அவர்களது தனிப்பட்ட விவகாரம் என்று காரணம் கூறி, இதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதனையும் அளிக்க அவர் மறுத்துவிட்டார். மெலனியாவின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெப்பனி க்ரீஷமும், அவர்கள் அரசு நிர்வாகப் பொறுப்பு எதிலும் இடம்பெறாதவர்கள் என்பதால், தான் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கியதுபற்றி எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறிவிட்டார்.

க்ரீன் கார்டு பெற்றது முதல் ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவில் வசிப்பவர்களே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இயலும். மெலனியாவின் குடும்பத்தினர் என்ற அடிப்படையில்தான் இவர்கள் க்ரீன் கார்டு பெற்றிருக்கவேண்டும் என்று தெரிகிறது. எனினும் இவர்கள் முதலில் எப்போது அமெரிக்காவுக்குள் வந்தார்கள், க்ரீன் கார்டு பெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதா என்பன பற்றிய தகவல்களில் தெளிவில்லை. 2007 சமயத்தில் இருந்து புளோரிடா மாகாணத்தின் பாம் கடற்கரையிலுள்ள டிரம்பின் தனியார் கிளப்பில் விக்டர் நேவ்ஸ் வசித்து வருவதாக பொது ஆவணங்கள் வழி அறிய முடிகிறது. “குடியுரிமை பெறும் வழிமுறைகளின் படி எல்லாம் சட்டப்படியாகவே நடந்தன. குடியரசுத் தலைவரின் மாமியார் மாமனார் என்பதால் சிறப்பு சலுகைகள் எதுவும் அளிக்கப்பெறவில்லை” என்று அவர்களது வழக்கறிஞர் வைல்டிஸ் கூறுகிறார்.

கடந்த ஆண்டு இதுபோன்ற உறவினர் குடியேற்றங்களை ஒழிக்க ஆதரவாக டிரம்ப் செயல்பட்டுவந்ததால், மெலனியாவின் பெற்றோர் பற்றிய சர்ச்சையும் அமெரிக்காவில் வெடித்துள்ளது.

2016 நிதியாண்டில் மட்டும் அமெரிக்கா 12இலட்சம் பேருக்கு க்ரீன் கார்டுகளை வழங்கியுள்ளது. அவற்றுள் 1,74,000 பேர் ஏற்கனவே குடியுரிமை பெற்றோரின் தாய்-தந்தையர் ஆவர்.

“சங்கிலித் தொடராக இப்படி வெளிநாட்டினர் குடியேறி சாதாரண பாட்டாளிகளான அமெரிக்கர்களின் வேலைக்கு வேட்டு வைக்கின்றனர். இவர்களால்தான் நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து அதிகரிக்கிறது” என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இவ்வாறாகக் குடியேறுபவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முன்னிலை வகிப்பதாகவும் அமெரிக்கர்களைவிட மிகக் குறைவான குற்றச்செயலில்தான் ஈடுபடுகிறார்கள் என்றும்தான் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே குடியேறுபவர்களுக்கு டிரம்ப் அளவுக்கு கஷ்டத்தை எவரும் கொடுத்ததில்லை. ஆனால் அவரது குடும்பத்தினர் என்றால் மட்டும் விஷயங்கள் வேறு மாதிரி நடக்கின்றன என்று டிரம்புக்கு எதிராகப் புகார் எழுந்துள்ளது. எனினும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

டிரம்பின் மனைவி மெலனியா க்ரீன் கார்டு பெற்றதிலும் முறைகேடு உள்ளதாக ஒரு சர்ச்சை ஏற்கனவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1996இல் நியு யார்க் வந்த வந்த முன்னாள் மாடலான இவர், 2000 முதல் டிரம்புடன் நெருக்கமான பழக்கத்தில் இருக்கத் தொடங்கினார். பெரும் சாதனையாளர்களுக்கான ஒதுக்கீட்டில் 2001ஆம் ஆண்டு இவருக்கு க்ரீன் கார்ட் வழங்கப்பட்டது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.