மம்தாவுக்கும், மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
New Delhi: மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக தொண்டர்கள், அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை “சிறப்பு அழைப்பாளர்கள்” பட்டியலுக்குக் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது, பாஜக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்குக் கொடுக்கும் மறைமுக சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
நேற்றிரவு தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில், அவரும் பாஜக தலைவர் அமித்ஷாவுக் சந்தித்து சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்துதான், இந்த “சிறப்பு அழைப்பாளர்” முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியல் தயாராக இருக்கிறது. நாங்கள் அதை விரைவில் ராஷ்டிரபதி பவனில் சமர்பிப்போம்” என்று பாஜக வட்டாரங்கள் நம்மிடம் தகவல் கூறுகின்றன.
மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் பலர், கடந்த 6 ஆண்டுகளாக, பஞ்சாயத்து தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின் போது கொல்லப்பட்டதாக அக்கட்சி கூறுகிறது. 2021 ஆம் ஆண்டு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, சுமார் 7000 பேர் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கச் செய்ய உள்ளது, மம்தாவுக்கு கொடுக்கும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
“திரிணாமூல் காங்கிரஸ் நிகழ்த்தும் வன்முறைக்கு” எதிராக கட்சி உங்களோடு துணை நிற்கிறது என்பதை சொல்லும் விதமாகவே பாஜக இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மே 23 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித்ஷா, மேற்கு வங்கத்தில் உயிரிழந்த பாஜக-வினர் குறித்து பேசி இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
2019 மக்களவைத் தேர்தலின்போதும் மேற்கு வங்கத்தில், திரிணாமூல் மற்றும் பாஜக-வினர் இடையே பல இடங்களில் மோதல் நடந்தது. அம்மாநிலத்தில் இந்த முறை மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் திரிணாமூல், 22 இடங்களிலும் பாஜக, 18 இடங்களிலும் வென்றுள்ளது.
நேற்று மட்டும் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து 50 முக்கிய புள்ளிகள் பாஜக-வுக்குத் தாவினர். இதில் 2 மக்கள் பிரதிநிதிகளும் அடங்குவர். மம்தாவுக்கும், மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என் கடமை. அதை நான் செய்வேன்” என்று அழைப்பு குறித்து கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.