This Article is From Jun 19, 2020

10-ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்வதா? அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

10-ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்வதா? அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

10-ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்வதா? அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்புப் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காலாண்டு மற்றும் அரையாண்டில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப் பதிவேட்டை அடிப்படையாக வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்களது பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்கள், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இத்தேர்வுகளுக்கு வராத மாணவர்களுக்கு தனியாக தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10-ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நியாயமான முறையில் மட்டுமே இந்தப் பணி நடக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரிடம் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால்' குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும்'' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

.