தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது-
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், திருவண்ணாமலை, நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது. இதுமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். பின்னர் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னையை பொருத்தவரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்யும். மீனவர்கள் இன்றும் நாளையும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.