இலவச பயணம் என்பது ஊழலுக்கு வழி வகுக்கும் என மெட்ரோ மேன் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
New Delhi: டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கும் நிலையில், அதற்கு அனுமதியளிக்க கூடாது என்று வலியுறுத்தி, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் (மெட்ரோ மேன்) மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது-
டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதியளித்தால் இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் இதே கோரிக்கை எழும். இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அளிக்கப்படும் என்பது முட்டாள்தனமான முடிவு.
மெட்ரோ ரயில் ஊழியர்களும், அதன் தலைமை நிர்வாகியும் கூட டிக்கெட் வாங்கி சேவையை பயன்படுத்த வேண்டும். கெஜ்ரிவால் இலவச சேவையை நடைமுறைப்படுத்த விரும்பினால், பயணச் செலவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அப்படிச் செய்து இலவச சேவையை நிறுத்திக் கொள்ளலாம்.
இலவச பயணத்தை வழங்கும்போது அதில் ஊழல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இந்த திட்டத்திற்கு பிரதமர் அனுமதி அளிக்கக் கூடாது.
இவ்வாறு ஸ்ரீதரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன். தனது பணியில் சிறப்பாக செயல்பட்டு மெட்ரோ விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்ததால் அவருக்கு மெட்ரோ மேன் என்ற பெயர் கிடைத்துள்ளது.
ஸ்ரீதரனின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சவுரவ் பரத்வாஜ், 'இலவச பயணத்தால் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது. இலவச பயணத்திற்கான செலவு அனைத்தையும் டெல்லி அரசு ஏற்றுக் கொள்ளும்.
டெல்லி அரசின் திட்டத்தின் நோக்கம் என்பது, பெண்களுக்கு சலுகை வழங்குவது மட்டுமல்ல. அரசு போக்குவரத்தில் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் ஆகும். மெட்ரோவில் பெண்கள் பயணம் செய்தால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்' என்றார்.