பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்.
New Delhi: ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: 99% பேருக்கு பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது என்றும் கிராமப்புறங்களில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெறவுள்ளன.
2019-20-ம் ஆண்டுக்கான வேளாண்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வேளாண், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
கிராமப்புறங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை இன்னும் ஆக்கப்பூர்வமாக செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் தற்போது 99 சதவீத ஊழியர்கள் நேரடியாக ஊதியத்தை பெறுகின்றனர்.
இதில் இருந்த இடைத் தரகர் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் 2025-க்குள் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செய்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)