This Article is From Oct 01, 2018

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: திமுக-வை புரட்டியெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்!

31 மாவட்டங்களில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், 10884.42 கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன

Advertisement
தெற்கு Posted by

கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி, மதுரையில் முதலாவது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் 31 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இறுதியாக, நேற்று சென்னை, நந்தனத்தில் ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா’ நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக-வை சரமாரியாக விமர்சித்தனர்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘திமுக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, விளம்பரத்துக்காக நடத்தப்படுகிறது என்று சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்தில் நடந்த விழாவிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 31 மாவட்டங்களில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், 10884.42 கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 547 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 434 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 43 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

திமுக-வின் உறுப்பினர்கள், பிரியாணி கடையில் சண்டை போட்டுள்ளனர். பியூட்டி பார்லருக்குச் சென்று ஒரு பெண்ணுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்தெல்லாம் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தாரா? அவர் என்ன சொன்னாலும் அது பொய்யாகத் தான் இருக்கிறது. அதிமுக அட்சியில் எந்த நலத் திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை என்று அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், நாங்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் மட்டும் அமல்படுத்திய திட்டங்கள் ஏராளம்’ என்று பேசினார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றும் போது, ‘தமிழகம் முழுவதும் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மக்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். நிறைவு விழாவில் மட்டும் 10 லட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

திமுக அரசு தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் குறித்து நாங்கள் பேசினால், நூற்றாண்டு விழா குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். காவேரி விவகாரத்தில், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தமிழர்களுக்கு எப்படியெல்லாம் துரோகம் செய்தது. அதையெல்லாம் எப்படி மறந்துவிட முடியும். இதைப் போன்ற உண்மைகள் குறித்து நாங்கள் பேசுவது தவறா?’ என்று கேள்வி எழுப்பினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement