This Article is From Jun 01, 2020

கொரோனா கால விமானப் பயணம்: அரசு முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன

கொரோனா கால விமானப் பயணம்: அரசு முக்கிய அறிவிப்பு!

கடந்த மே மாதம் 25 ஆம் தேதி, உள்ளூர் விமான சேவை மட்டும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 

ஹைலைட்ஸ்

  • உள்ளூர் விமான சேவை மட்டும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது
  • 2 மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
  • கொரோனா பரவலைத் தொடர்ந்து விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது

இந்தியாவில் உள்ளூர் விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  விமானங்களில் நடு இருக்கைகள் முடிந்தவரை காலியாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளப்படும் என்று பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) பிடிஐ செய்தி நிறுனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது, நடு இருக்கைகள் காலியாக விடுவது சாத்தியமாகாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விமானங்களில் நடு இருக்கைகள் ஒதுக்கப்படும் பயணிகளுக்கு, முகவுரை, முகமூடி மட்டுமல்லாமல் ‘போர்த்திக் கொள்ள துணி' கொடுக்கப்பட வேண்டும் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 25 ஆம் தேதி, உள்ளூர் விமான சேவை மட்டும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து விமானங்களில் நடு இருக்கைகள் காலியாக விடப்படுமா, அல்லது அவையும் நிரப்பப்படுமா என்பது குறித்த விவகாரம் விவாதப் பொருளானது. இது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், “கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைத்திருப்பது என்பது மிக அவசியமாகும். அப்படிச் செய்வதன் மூலம்தான் சமூக விலகலை கடைபிடிக்க முடியும். மத்திய அரசு தனியார் விமானங்களைப் பற்றிக் கவலைப்படுவதை விட, நாட்டின் குடிமக்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டும்,” என்று சாடியது.

மேலும் உச்ச நீதிமன்றம், முன்னரே விமானப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால் ஜூன் 6 ஆம் தேதி வரை மட்டும் நடு இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதியளித்தது. 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்னரே, மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதின்றம், ‘மும்பை நீதிமன்றம், விமானங்களுக்கான வழிகாட்டுதல்கள் பற்றி முடிவெடுக்கும்' என்று உத்தரவிட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முன்னதாக, பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் புரி, “விமானங்களின் நடு இருக்கைகளை காலியாக வைத்திருந்தால், பயணச்சீட்டு கட்டணம் அதிகமாகும்,” எனக் கூறியிருந்தார். 


 

.