Etawah, Uttar Pradesh: பணியிட மாற்றத்தால் அதிருப்தி அடைந்த காவல் துணை ஆய்வாளர் ஒருவர், தனது எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது பணிபுரியும் காவல் நிலையத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட 65 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மற்றொரு பகுதிக்கு எஸ்.ஐ. வாகனங்களை பயன்படுத்தாமல் ஓட்டம் மூலமாகவே சென்றிருக்கிறார்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை முதலுதவிக்காக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில் நடந்துள்ளது.
விஜய் பிரதாப் என்ற துணை ஆய்வாளர் போலீஸ் லைன்ஸ் என்ற பகுதியில் பணிபுரிந்து வந்தார். அவரை உயர் அதிகாரிகள் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பித்தோலி என்ற இடத்திற்கு மாற்றினர். இது பிரதாபுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தான் எவ்வளவு எடுத்துக்கூறியும் பணியிட மாற்றம் செய்வதில் உயர் அதிகாரிகள் கறாராக இருந்ததாக பிரதாப் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஓடியதை உயர் அதிகாரிகள் கோபமாகவோ அல்லது அதிருப்தியாகவோ எடுத்தக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு பிரதாப் 65 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டம் பிடித்தார். வழியில் அவர் உடல் பாதிப்படைந்ததை கண்ட போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.