புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாக செல்ல வேண்டாம்: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச்.25ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை அமலில் உள்ளது. இதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல், உணவில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தனர். ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளும் இல்லாததால், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல், நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்ல தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து, புலம் பெயர் தொழிலளளுக்கான சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், சமூக இடைவெளி உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் ரயிலில் செல்வதற்கும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை மார்க்கமாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கின்றனர்.
இதனால், சமீபத்தில் பல புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
கடந்த 6-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை 55 ஆயிரத்து 473 வெளிமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 ரயில்களில் பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதுவரை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.