டிரம்ப் நிர்வாகத்தில், மைக் பாம்பியோ இந்தியாவுக்கு 3வது முறையாக வருகிறார்.
New Delhi: அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ டெல்லியில் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாதம், எச்1பி விசா, வர்த்தகம், ரஷ்யாவுடனான ஆயுத ஒப்பந்தம், இரானில் இருந்து எண்ணை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின், மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மைக் பாம்பியோவின் வருகையே, வெளிநாடுகளில் இருந்து வரும் முதல் பெரும் வருகையாகும்.
வரும், 28, 29ம் தேதிகளில் ஜப்பானில், 'ஜி20' மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச உள்ளார். மோடி - டிரம்ப் சந்திப்புக்கு முன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ இந்தியா வந்துள்ளார்.
பாம்பியோ நேற்று இரவு டெல்லியில் தரையிறங்கிய சில மணி நேரங்களில், டெல்லிக்கு வருகை என்பது இந்தியாவுடனான நட்புறவை ஆழமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. "சமீபத்திய தேர்தல்களில் பிரதமர் மோடியின் மாபெரும் வெற்றி, இந்தியா மீதான தனித்துவமான பார்வையை உருவாக்கியுளது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மைக் பாம்பியோ உடனான பேச்சுவார்த்தை என்பது மிகவும் முக்கியமானதாகும். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிச்சயம் நாங்கள் விவாதிப்போம்,
இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது என்பது இயற்கையானது தான். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் விருப்பம் கொண்டுள்ளன. தொடர்ந்து, நாங்கள் நேர்மறையான அணுகுறையுடன் கலந்துரையாடுவோம் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, இன்று பிற்பகல் மைக் பாம்பியோவுக்கு, ஜெய்சங்கர் மதிய விருந்தளிக்க உள்ளார்.
இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் சிறுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில பொருட்களுக்கான இறக்குமதி வரியை, இரு நாடுகளும் உயர்த்தியுள்ளன. சிறப்பு பொருளாதார அந்தஸ்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் திடீரென விலக்கி கொண்டது, தவறான நடவடிக்கை.பாதுகாப்பு துறையில், இந்தியா மிகவும் சிறந்த கூட்டாளியாக உள்ளது. இரு தரப்பு உறவின்போது, நமது கூட்டாளிக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என பாம்பியோவுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.