বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 10, 2019

Auto Crisis: தொடரும் வாகனத்துறை நெருக்கடிக்கு காரணம் இதுதாங்க- நிதி அமைச்சரின் ‘அடடே’ விளக்கம்!

அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் தற்போது நிலவிவரும் நெருக்கடி சரியாகும் என்று ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள்

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)
Chennai:

நாட்டில் நிலவிவரும் வாகனத் துறை நெருக்கடி குறித்து இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இன்றைய கால இளைஞர்கள் கார் வாங்குவதைவிட, ஓலா, உபர் மூலம் போவதைத்தான் விரும்புகிறார்கள். புதிய கார்களை வாங்க அவர்கள் விரும்பவதில்லை. அதுவும் வாகனத் துறை பாதிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது' என்று பேசியுள்ளார். 

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை இரட்டை இலக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் கனரக வாகன விற்பனையிலும் 70 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 100 நாட்கள் ஆனதையொட்டி, சென்னையில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் பேசிய நிர்மலா சீதாராமன், “நாட்டில் வாகனத் துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பி.எஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனங்களைப் பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை மாற்றம், மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இ.எம்.ஐ கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள். அரசில் அங்கமாக இருக்கும் அனைவரும் பல்வேறு பிரிவினரிடையே தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசி வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement

காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு, “பஸ் மற்றும் ட்ரக் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதும் இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால்தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. 
 

சுமார் 3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறை, வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டில் அதிக 2 சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப், கடந்த மாதம் மட்டும் 20 சதவிகித விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் மாருதி சுசூகியின் விற்பனை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. 

கடந்த மாதம் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், இந்தப் பிரச்னையை சரிசெய்யும் நோக்கில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு துறைகள் புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். 

Advertisement

தற்போது வாகனத் துறைக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை 18 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது குறித்து சீதாராமன், “ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து நான் தனி நபராக முடிவெடுக்க முடியாது” என்று மட்டும் கூறியுள்ளார். 

அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் தற்போது நிலவிவரும் நெருக்கடி சரியாகும் என்று ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அடுத்த 4 மாதத்தில் நிலைமை மாறவில்லை என்றால், சூழல் மேலும் மோசமடையும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். 

Advertisement

ANI தகவல்களுடன் எழுதப்பட்டது

Advertisement