திமுக-வுடன் தோழமையுடன் இருக்கும் கட்சிகளுக்கு மத்தியில் தொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘வைகவும், திருமாவளவனும் தன் மானத்தை இழந்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் திமுக கூட்டணி குறித்து மேலும் பேசுகையில், ‘திமுக கூட்டணி என்பது ஒரு நெல்லிக்காய் மூட்டை போன்றது. இப்போதே அந்த மூட்டையின் கயிறு பிரிய ஆரம்பித்துவிட்டது. அது சீக்கிரமே விழும். அப்போது மூட்டைக்குள் இருக்கும் நெல்லிக்காய்கள் உருண்டோடிவிடும்.
அந்தக் கூட்டணியில் இருப்பவர்களுக்கு தன் மானம் இருக்கிறது என்று நம்புகிறேன். அண்ணன் வைகோவும், அன்புச் செல்வர் திருமாவளவனும் தன் மானத்தை இழக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கலகலத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய திமுக பொருளாளர் துரை முருகனிடம், ‘வைகோ அதிமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளாரே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரை முருகன், ‘திமுக கூட்டணியில் மதிமுக இல்லை. எனவே, அது குறித்து நான் கருத்து கூற முடியாது' என்று பதிலளித்துவிட்டார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையில் மீண்டும் பிளவு விழுந்துவிட்டது என்று தமிழக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நேரத்தில் தான், ஸ்டாலின் தலைமையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் வைகோவும் கலந்து கொண்டார். திருமாவளவனும், ஸ்டாலினை நேரில் சந்தித்து, குறைகளை சொன்னார். பின்னர் ஸ்டாலின், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டித் தான் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.