Janardhan Reddy: ஏற்கனவே 3 வருடம் சிறையில் இருந்து வந்த ஜனார்த்தன ரெட்டி கடந்த 2015ல் ஜாமினில் வெளிவந்தார்.
Bengaluru: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது (Janardhan Reddy Arrested) செய்தனர். நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று மாலை ஆஜரானார். இதைத்தொடர்ந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நம்பகமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவரை கைது செய்ய நாங்கள் முடிவு எடுத்தோம். நாங்கள் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளோம். மேலும், அவரிடமிருந்து பணத்தை மீட்டெடுத்து அதன் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என பெங்களூரு மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று ஜனார்த்தன ரெட்டி யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில், தான் தலைமறைவாக இல்லை என்றும், ஹைதராபாத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்தவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த அவர் காவல்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், எந்தவொரு அரசியல் அழுத்தத்தையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆம்பிடென்ட் என்ற தனியார் நிதிநிறுவனம், கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியது. இது குறித்து அமலாக்கத்துறையினர் ஆம்பிடென்ட் நிறுவன உரிமையாளர் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும் முடக்கியது.
அப்போது பாஜக அமைச்சராக இருந்த ஜனார்த்தன் அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து பரீத்தை காப்பாற்றுவதற்காக உறுதியளித்தார். மேலும், இடைத்தரகர் அலிகார் மூலம் 57 கிலோ தங்கத்தை பரீத்திடம் முதற்கட்டமாக இருந்து ஜனார்த்தன் பெற்றார். இதன் மதிப்பு சுமார் 18 கோடி ரூபாயாகும். இந்த தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இடைத்தரகர் அலிகாரை கைது செய்த போலீசார், ஜனார்த்தனை தேடி வந்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரது பெங்களூரு, பல்லாரி வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.