முன்னதாக, திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, நடிகர் அஜித் இதுதொடர்பாக அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொதுமக்கள் இடையே விதைக்கும்.
இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்ப்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன் என்று கூறினார்.
நடிகர் அஜித்தின் இந்த அறிக்கை மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது. சமூகவலைளதங்கள் முழுவதும் டிரெண்டிங் ஆனது. தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுவது குறித்து அஜித்குமார் உடனடியாக தெளிவுபடுத்தியது, தமிழக மக்களிடையே அஜித்குமாருக்கு பெரும் பாராட்டுகளை பெற்று தந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் அஜித்குமார் வெளிப்படையாக தெரிவித்தது பாராட்டுக்குரியது. நடிகர் அஜித் மிகுந்த துணிச்சல் மிக்கவர், தொழில்பக்தி மிக்கவர், அவர் வெளிப்படையாக பேசுவது எனக்குப் பிடிக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அதிமுக முடுக்கிவிட்டுள்ளது என்றும் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைக்கான தேர்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.