முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், அவர் இறந்ததற்கு என்னக் காரணம் என்பது பற்றி புதிய விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
ஆண்டிப்பட்டியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய சீனிவாசன், ‘ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதையடுத்து, சரியான மருத்துவம் பார்க்கவில்லை. அதை சரியாக செய்திருந்தால் என்ன..? சசிகலா கொள்ளை அடித்த மன வேதனையில்தான் ஜெயலலிதா இறந்தார். ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்தவரின் உறவினர்தானே தினகரன். ஜெயலலிதா சிறைக்குச் செல்லக் காரணமானவரும் தினகரன்தான்' என்று திடுக்கிடும் வகையில் பேசியுள்ளார்.
இதற்கு முன்னர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய சீனிவாசன், ‘நாங்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நேரில் சென்று பார்க்கவே இல்லை. ஊடகங்களிடம் பொய் சொன்னோம்' என்று கூறி பகீர் கிளப்பினார். இந்நிலையில் சசிகலாதான் ஜெயலலிதா இறப்புக்குக் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை நிலவியதால், அது குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினரிடம் விசாரித்து வருகிறது.