This Article is From Sep 19, 2018

சென்னையில் மின்சாரப் பேருந்துத் திட்டம்: அமைச்சர் லண்டனுக்கு விசிட்!

சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது

Advertisement
நகரங்கள் Posted by

லண்டன் குழுவுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னையில்(chennai) மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக லண்டனில் இயங்கி வரும் மின்சாரப் பேருந்துகள் குறித்து தெரிந்து கொள்ள தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அங்கு சென்றுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சென்னை மாநகர பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையினை பூர்த்தி செய்வதில் மாநகர் போக்குவரத்துக் கழகம் பெரும்பங்காற்றி வருகிறது. குறிப்பாக, சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பாதுகாக்கின்ற வகையில், மேலை நாடுகளில் முன்னேறிய மாநகரங்களை உறுப்பினர்களாகக் கொண்டு, லண்டன் மாநகரத்தில் இயங்கி வரும் சி-40 என்கின்ற முகமையின் வழிக்காட்டுதலின்படி, சென்னையில் மின்சாரம்/மின்கலன் பேருந்துத் திட்டத்தினை செயல்படுத்திட கடந்த மார்ச் திங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைக்கும், சி-40 முகமைக்குமிடையே கையெழுத்தானது. சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைக்கின்ற வகையில் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்தல், புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல், குறைந்த விலையில் மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்தல், இவ்வகை மின்சாரப் பேருந்துகளை திறம்பட இயக்கிட சாலை வரைபடம் தயாரித்தல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தூய்மையான மின்சாரத்தினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இம்முகமையானது தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்கு உதவிகளை வழங்கும்.

சி-40 முகமையின் அழைப்பினை ஏற்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதாரும் லண்டன் மாநகரத்தில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்தினையும், பேருந்து பணிமனையினையும் 17.09.2018 அன்று பார்வையிட்டார்கள்.

Advertisement

சி-40 முகமையின் உதவியோடு விரைவில் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயங்கிட, இந்தப் பயணம் பெரிதும் பயன் தரும் வகையில் இருந்ததாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சி-40 முகமையின் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement