This Article is From Aug 20, 2020

“அதிமுக-வை எச்.ராஜா உரசிப் பார்க்கக்கூடாது..!”- அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

தவறாக பேசிவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டது ஆண்மையுள்ள செயலா..? வலிமையுள்ளவர்கள் செய்யும் செயலா?

“அதிமுக-வை எச்.ராஜா உரசிப் பார்க்கக்கூடாது..!”- அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

"ட்விட்டர் ஒரு விஷயத்தைப் போட்டுவிட்டு, ஏன் அப்படி பதிவு போட்டீர்கள் என்று கேட்டால், என் அட்மின்தான் செய்தார் என்று சொல்வது ஆண்மையுள்ள செயலா..?"

ஹைலைட்ஸ்

  • விநாயகர் சதூர்த்திக் கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை
  • இந்த உத்தவரவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
  • எச்.ராஜா, அதிமுக அரசை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, அதிமுக-வை உரசிப் பார்க்கக் கூடாது என்று தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். 

விநாயகர் சதுர்த்தி விழாவினை, பொது இடங்களில் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னொரு ஆணையினைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த முடிவால் இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அதிருப்தியடைந்துள்ளனர். அரசின் முடிவையும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு' என ட்விட்டரில் முதலாவதாக பொங்க, 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், ‘நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு. மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை. சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்' என்று ராஜாவுக்கு பதிலடி கொடுத்தார். 

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், “ட்விட்டர் ஒரு விஷயத்தைப் போட்டுவிட்டு, ஏன் அப்படி பதிவு போட்டீர்கள் என்று கேட்டால், என் அட்மின்தான் செய்தார் என்று சொல்வது ஆண்மையுள்ள செயலா..? வலிமையான செயலா? 

தவறாக பேசிவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டது ஆண்மையுள்ள செயலா..? வலிமையுள்ளவர்கள் செய்யும் செயலா? எச்.ராஜா, அதிமுகவை உரசிப் பார்க்கக்கூடாது. இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதிமுகவில் உள்ளவர்கள் அதைப்போலத்தான்” என்று எச்சரித்துள்ளார். 

.